-சுதர்சன ராஜு
கி.மு, கி.பி என்பதுபோல கொ.மு கொ.பி என்று கொரோனா சில கலாசார மாறுதல்களை உண்டாக்கி இருக்கிறது.வருங்காலத்தில் உணவு துறையினர் வாடிக்கையாளர்களுக்கு கொண்டுவரும் உணவு சார்ந்த மாற்றமே நலம் தர இருக்கிறது . விருந்தோம்பல்தான் நமது பண்பாடு. ஆனால், இப்பொழுது கூடாமல் வாழ்ந்தால் கோடி நன்மை என்னும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். கொரோனனாவுக்குப் பின் இனி கரம்கூப்பி வணங்குதல் அதிகம் நிகழும், இது ஒரு மகிழ்ச்சி`கரமான’ செய்தி. உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள, மொத்த இந்தியாவும் தயாராகி கொண்டிருக்கும் நிலையில்,உணவு துறையில், நம்முடைய நிலை என்ன?
ஆரோக்கியம், செல்வம், நல்வாழ்வு என, அனைத்திற்கும் சேதம் விளைவித்து வருகிறது, ‘கொரோனா’ தீநுண்ணுயிரி. இது, மனித இனத்திற்கு எதிராக நடக்கும் உலக போர் என்று கூட, சிலர் சொல்கின்றனர்.
கோவிட்-19 நுண்ணுயிரி பொருளாதார ரீதியில் அனைத்து மக்களையும் முடக்கிப் போட்டு உள்ளது. இதில் குறிப்பாக உணவு துறை மற்றும் விருந்தோம்பல் துறை எண்ணற்ற சரிவை சந்தித்து உள்ளது என்பதே நிதர்சன உண்மை. இனிவரும் காலங்களில் நுகர்வோரின் உணவு பழக்கங்களில் ஏற்பட இருக்கும் மாற்றமும், உணவுத் துறையில் வரும் மாறுதலும் உணவுண்பவர்களின் ஆரோக்கியத்தையும் உடல் நலத்தையும் மீட்டுத் தர உதவும் ..
ஆரோக்கியமான உணவு முறைக்கு மாறவேண்டும் என மைசூரில் பணிபுரியும் முன்னணி சமையல் கலைஞர் செல்வகுமார் அவர்கள் கூறினார். மேலும் அவர் “இனி வரும் காலங்களில் சத்தான பழங்கள் காய்கறிகளை உணவு துறையினர் அதிகம் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதுவே நலம் தரும் .வீட்டு சமையலில் சேர்ப்பது போன்ற உணவு மசாலாக்களை உணவு நிறுவனங்கள் சேர்க்க வேண்டி வரும் .ரெடிமேட் உணவுகள் இனிவரும் காலங்களில் பயனளிக்காது. ஊட்டச்சத்து நிறைந்த உணவு நம்மை வருங்கால நோயில் இருந்து காக்க உறுதியளிக்கும்”என்றார் .
உணவுத் துறை இனிவரும் காலங்களில் பழையபடி செழிக்க வேண்டும் எனில் மக்களிடையே நம்பிக்கை உணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டும் அல்லாமல்
அதற்கு மேஜைகள் மற்றும் அனைத்து உபகரணங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும் .ஊரடங்கு காரணமாக பல்வேறு உணவு நிறுவனங்கள் தங்களது உணவு நிறுவனங்களை செயல்படுத்த முடியாத நிர்பந்தத்தில் உள்ளனர்.குளிர்சாதன வசதி
இல்லாமல் ஒரு உயர்தர உணவு விடுதி நடத்துவது என்பது இயலாத காரியம் . பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வரும் சமையல் கலை நிபுணர் முனைவர் எம்.எஸ்.ராஜ்மோகன் அவர்கள் பல்வேறு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார் .”மக்களுக்கு உணவு நிறுவனங்களின் மீது நம்பிக்கை வர வேண்டும் எனில் அதற்கு அவர்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை முறைகளில் உணவு பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் .சுவையான உணவுடன் சேர்த்து சத்தான உணவுக்கு முக்கியத்துவம் தர நிறுவனங்கள் முயற்சிக்கவேண்டும்” என்றார் .
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு என்ற முறையைக்கு அனைவரும் முக்கியத்துவமும்
உணவு பழக்கங்களில் மாற்றமும் கொண்டு வரவேண்டும். இனிவரும் காலங்களில் மிளகு, கீரை வகைகள் என நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவினை கொண்டு உணவினைத் தயாரிக்க வேண்டும் .அதுவே மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நல்ல ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.மக்களின் உணவு முறையானது இந்த ஊரடங்கு காலத்தில் மாற்றம் அடைந்திருக்கும் அதாவது அவர்கள் வீட்டு சமையலில் சுவையான உணவினை உண்டிருப்பார்கள் .அதற்கேற்றவாறு நாமும் உணவகங்களில் வீட்டு சமையல் சார்ந்த சத்தான உணவினை வழங்கவேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
உயர்தர ஐந்து நட்சத்திர உணவு வகைகளைக் காட்டிலும் இரண்டு மூன்று நட்சத்திரங்கள் கொண்ட உணவு விடுதி இதனை மேற்கொள்வது எளிதான காரியம்.
நல்லவாழ்க்கைக்கு தேவை ஆரோக்கியமான உணவு அழகிய உணவு அல்ல :
பெரும்பாலான மக்களிடையே சத்தான உணவினை உண்டால் மட்டுமே தம்மைக் காத்துக் கொள்ள இயலும் என்ற புரிதல் வந்துவிட்டது. எவ்வாறாவது தன்னை நோயிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர் .”நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் நம் முன்னோர் வழி காட்டிய பாரம்பரிய உணவுகளை கொண்டு வருவது நல்ல பலனளிக்கும் என கூறுகிறார் திருப்பூரில் உள்ள முன்னணி உணவகத்தில் பொது மேலாளராக பணிபுரியும் ஜெயக்குமார் அவர்கள்,
“பல்வேறு மேற்கிந்திய உணவு முறைகளே இதற்கு முன் நாம் பின்பற்றி வந்தோம் இனிவரும் காலங்களில் அது பயன் அளிக்காது.நம்முடைய பாரம்பரிய உணவுக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது அதுமட்டுமில்லாமல் நம்முடைய முன்னோர் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள கூறிய மஞ்சள், மிளகு ,மல்லி புதினா இவற்றை நாம் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே சத்தான நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிகோலும்.”என்றார் .
தரமான தென்னிந்திய உணவு முறையே இதற்கு மேலும் வலு சேர்க்கும் . இனிமேல் காபி,தேநீர் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் கேட்கும்பொழுது அதற்கு பதிலாக இஞ்சி தேனீர் ,மசாலா பால் போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என உணவு பரிமாறும் கலைஞர்கள் பரிந்துரைக்கலாம். அதுவே மக்களின் ஆரோக்கியத்தையும் உணவகங்களில் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை யும் மேம்படுத்த உதவும். அனைத்து உணவு நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களுக்கு போதுமான வழிகாட்டு நெறிமுறைகளையும் பாதுகாப்பு சார்ந்த வழிமுறைகளையும் வழங்க வேண்டும் .இதுவே வருங்காலத்தில் நல்லபலன் அளிக்கும் என ஜெயக்குமார் அவர்கள் கூறினார்.
உணவு தயாரிப்பாளர் என்ற முறையில் சென்னையை சேர்ந்த ஓக்மோ நிறுவனத்தின் , நிறுவனர் கிருஷ்ணகுமார், இனிவரும் காலங்களில் இயற்கை சார்ந்த உணவு முறையில் தயாரிக்கப்படும் உணவகங்கள் வளர்ச்சியடையும் என்றார் .அதுமட்டுமில்லாமல் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என்பது சிறுதனியங்களில் அதிகம் உள்ளது .உணவகங்கள் சிறுதானியம் சார்ந்த உணவு முறைக்கு மாற வேண்டிய நிலை வரும். அதுவே மக்கள் இனி வரும் காலங்களில் பெரிதும் விரும்பும் மாற்றமாக இருக்கும் என தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் உணவுத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என பிளேவர் (flavour) மாபியா உணவு நிறுவனத்தை சேர்ந்த சமையல்கலை தலைமை ஆலோசகர் பிரீத்தி அவர்கள் தெரிவித்தார்.மேலும் அவர், “இணையமுறைக்கு இனிவரும் காலங்களில் அனைவரும் மாறவேண்டிய சூழ்நிலைகட்டாயம் வரும் ஏனென்றால் நேரடியாக உணவினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை விட இணையம் மூலமாக அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு செயல்படுவது நல்ல பலனை உணவுசமூகத்திற்கு வருங்காலத்தில் அளிக்கும்” என்றார்.
முக்கியமாக உணவகங்களில் நேரடியாகவும் ஆன்லைன் ஆர்டர் எனப்படும் இணையத்தின் மூலம் உணவு பட்டுவாடா செய்யும்போதும் புற ஊதா கதிர்வீச்சு கொண்டு அனைத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் அப்போது தான் நோய்க்கிருமி தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியும். “பொட்டலம் வழங்கும் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அதில் இன்னும் பாதுகாப்பு சார்ந்த அக்கறை செலுத்த வேண்டும் “எனவும் செல்வகுமார் தெரிவித்தார்.
ஷெப் பாரத் வலைத்தளத்தில் உள்ள செய்திகளை உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு வந்தடைய உங்கள் விபரங்களை எங்கே உள்ள இணைப்பை சொடுக்கவும் – https://forms.gle/aLFrDjgPWNh57fLX6-