-சுதர்சன ராஜு
உணவு கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளை பார்த்திருப்போம் உணவு தயாரித்து அசத்தும் குழந்தையை பார்த்து இருப்பீர்களா அவ்வாறு ஒருவர் இருப்பார் எனில் அது வினுஷா தான் .சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல, பத்து வயதில் பேக்கிங் தொழிலில் பல்வேறு முத்திரைகளை பதித்து வரும் சிறுமி வினுஷா நிச்சயம் ஒரு அதிசயம் தான்.
இது குறித்து அறிந்துகொள்ள வினுஷாவின் தந்தை முத்துராமலிங்கத்திடம் தொடர்பு கொண்டபோது வினுஷா தனது பள்ளி ஆன்லைன் வகுப்பு பாடங்களை கவனித்து வருவதாகவும் வகுப்புகள் முடிந்தவுடன் தங்களிடம் பேச சொல்கிறேன் எனவும் தெரிவித்தார்.
சிறிது நேரம் கழித்து வினுஷா , ‘ஷெப் பாரத்’ உடன் தொலைபேசி உரையாடலின் போது தன்னுடைய பேக்கிங் ஆர்வம் மற்றும் கனவு தன்னுடைய கற்பனை கொண்டு பேக்கிங்கில் செயல்பட்டுவரும் விதம் குறித்து மகிழ்ச்சியுடன் விவரித்தார்.
ஏழை குழந்தைகளுக்கான பேக்கிங் பள்ளியைத் தொடங்குவதை என்னுடைய முக்கிய நோக்கம் எனவும் தனது கற்பனைத் திறன் கொண்டு புதுப்புதுக் கப் கேக் களை வடிவமைப்பது மிகவும் பிடிக்கும் என கூறினார்.
4 ஆம் வகுப்பு படித்து வரும் வினுஷா தற்போது பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
“எப்போதும் பேக்கிங் மற்றும் உணவு பற்றிய பதிவுகளை நோக்கியே என்னுடைய ஆர்வம் இருக்கிறது.கடந்த ஆண்டு, எனது பிறந்தநாளில் என் அம்மாவை ஆச்சரியப்படுத்த விரும்பினேன். நான் என் தோழியுடன் சேர்ந்து ஒரு கேக்கை உருவாக்க முயற்சித்தேன், இது நான் பேக்கிங்கை எவ்வளவு நேசித்தேன் என்பதை சுயமாக உணர தூண்டுகோலாக அமைந்தது என வினுஷா மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
வினுஷாவின் தந்தை தனது மகளின் பேக்கிங் பயணம் குறித்து கூறும்போது“என் மகள் பேக்கிங்கில் மிகவும் ஆர்வமாக இருந்தாள். வழக்கமான படிப்பைத் தவிர்த்து அவளுடைய ஆர்வத்தை ஏன் பின்பற்றக்கூடாது என்று நினைத்தேன்,அவளுடைய நம்பிக்கையை வீணாக்கவில்லை. மற்றும் நாங்கள் உணவுத்துறை பின்புலத்தைக் கொண்டவர்கள் அல்ல, வினுஷாவின் ஆர்வத்திற்கு உதவினோம் ,இது அனைத்தும் வினுஷாவின் சொந்த முயற்சியாகும்.”
பத்து வயது சிறுமி வினுஷா இன்று பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் இதுகுறித்து கூறும்போது, “என் அம்மாவுடன், நான் பல வகுப்புகளில் கலந்துகொண்டேன், அதன் மூலம் என் திறமையை வளர்த்துக் கொண்டேன், எனக்கு நிறைய இடங்களில் கலந்து கொள்ள அடிப்படைவயது இல்லாத காரணத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது அப்போதும் என்னுடைய ஆர்வம் பேக்கிங் குறித்து கற்றுக் கொள்வதிலேயே இருந்தது.நான் நிறைய தொழில்முனைவோரைச் சந்தித்தேன், அவர்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டேன். ஒரு கட்டத்தில், நான் ஏன் என் சொந்த தொழிலை தொடங்கக்கூடாது என்று நினைத்தேன், இதனால் Four Seasons Pastry என்னும் நிறுவனத்தைத் தொடங்கினேன் என உணர்ச்சி வசப்பட தெரிவித்தார்.
பருவங்கள் மற்றும் கப்-கேக்குகள் மீதான அவரது அதீத ஆர்வம் மற்றும்அன்பிலிருந்து இந்த பெயர் பிறந்தது என கூறினார். வினுஷாவின் ஆர்வத்தை ஒரு தொழிலாகத் தேர்வுசெய்ய அவளுடைய பெற்றோர் அவளை ஊக்குவித்தனர். இன்று, வினுஷா வெண்ணிலா சாக்லேட் கப்கேக்குகள், பருவகால கப்கேக்குகளில் நிபுணத்துவம் பெற்றவராக விளங்குகிறார்.
பேக்கிங்கில் தற்போதைய போக்குகளைப் பற்றி புதுப்பித்துக்கொண்டிருக்கும் பேக்கிங்கில் 40 வருட அனுபவம் கொண்ட சாமிதோசைக்கல் உணவகத்தின் நிறுவனர் சுரேஷ் சின்னசாமி மற்றும் பேக்கிங்கின் அடிப்படைகளை கற்பித்த லட்சுமி ரெட்டி ஆகியோரும் வினுஷாவின் வழிகாட்டிகளில் சிலர் ஆவர்.
“இந்த கோவிட் -19 கால கட்டத்தில் எனது நிறுவனத்திற்கான வலைத்தளத்தை உருவாக்கியுள்ளேன். எனது விற்பனையை சென்னை முழுவதும் நிறுவ விரும்புகிறேன். நான் குழந்தைகளுக்காக ஒரு பேக்கிங் கிட் ஒன்றை உருவாக்கியுள்ளேன், இந்தியா முழுவதும் விற்க விரும்புகிறேன், பேக்கிங் ஒரு கடல் , பேக்கிங்கின் பின்னால் உள்ள அறிவியலை தன்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை பொங்க வினுஷா கூறுகிறார்.
குழந்தை வினுஷாவின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் விதமாகவும், நல்லெண்ணதை பாராட்டும் வகையில் பிரபல சில்லறை மற்றும் உணவக மென்பொருள் நிறுவனமான கோ பிருகள் (GoFrugal ) தங்களது மென்பொருளை இலவசமாக தர முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷெப் பாரத் இணையத்தில் வினுஷாவின் ஆங்கில பேட்டியை படித்த அந்நிறுவனத்தின் நிறுவனர் குமார் வேம்பு இதை தெரிவித்தார்.
நாமும் நம்முடைய குழந்தைகளின் ஆர்வத்திற்கும் எண்ணத்திற்கும் மதிப்பளித்து அவர்களை ஊக்குவித்தால் நிச்சயம் சாதனை புரிவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.